நூல்களைக் கொண்டாடுவோம்

நூல்களைக் கொண்டாடுவோம் -07
***"


நூல் : கண்ணாடி நகரம்

ஆசிரியர் ;  ஜெயதேவன்

வகை : கவிதை

வெளியீடு : அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்

     தீநுண்மிக் காலத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தபடியிருக்கும் சமூகத்தின் வளர்ச்சிப் பாதையைச் சற்றே நிதானமாக யோசிக்க வேண்டிய மையப் புள்ளியில் இருக்கிறோம். உலகம் முழுக்க மாற்றங்கள் தொழிற்புரட்சி, பசுமைப் புரட்சியென வேறு வேறு பெயர்களால் ஒவ்வொரு துறையும் வளர்ந்த போதே , நமக்குப் பொருத்தமற்றவைகளும் வரத் துவங்கியதன் விளைவே  இன்று பதற்றமான நிலைக்கு ஆளாக்கியிருக்கிறோம்

   நம்மிடமிருந்த செல்வங்கள் ஒவ்வொன்றாகப் பறிபோனதல்லாமல் குப்பைகள் யாவும் ஆச்சரியங்களின் வண்ணத்தாள் சுற்றப்பட்டு நமக்கு வந்து சேர்ந்தன.

     ஒவ்வொரு நூற்றாண்டும்  மாற்றங்களின் பெயரால் ,தற்காலிக இன்பங்களாலும் நிரந்தர துன்பங்களாலும் சூழந்த வாழ்வையே எதிர்கொள்கின்றன.உலகம் முழுக்க பருவநிலை மாற்றங்களால் சூழலியல் சீர்கேடுகள் பெருகிவருகின்றன. யார் வாழ்வதற்கான வளர்ச்சி என்றறியாமல் தொடர்ந்து திணிக்கப்பட்ட புதுமைகள் உயிர்குடிக்கும் ஆயுதங்களாகவே மாறிப்போயிற்று. தவிர்க்கலாமே என்ற உரத்த குரல் எழும் போதெல்லாம் ,நாகரிக வளர்ச்சியை அறியாத அறியாமையாளர்களாக அறிமுகப்படுத்தப்பட்டு, இறுதியில் வீக்கங்களே வளர்ச்சியானது. இப்போது  அதற்கான பலனாக ,பெயரறியா நோய்கள் , மருத்துவம் கண்டறியாத  நோய்களென உலகம் பதைபதைக்கிறது.

   இதையெல்லாம் அவ்வப்போது அறிவியலாளர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். எது மக்களுக்கான அறிவியல் என்ற அறிதலற்ற கல்வி  அவ்வாறு செய்ய தடையாக இருக்கிறது. வேறு யார் செய்வது?

    எப்போதும் மக்களுக்கு எதிராக உருவாகும் யாவற்றையும் இனங்கண்டு ,எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் ,மனசாட்சியோடு உரத்த குரலில் பேசக்கூடியவை கலை இலக்கியப் படைப்புகளே..

    அத்தகைய அடிப்படை மனித நேயத்தோடும் ,சூழலியல் புரிதலோடும், சமூகத்தின் மீதான கவனத்தோடும் தனது படைப்புகளை நமக்குத் தந்திருக்கிறார் கவிஞர் ஜெயதேவன்.

    " கண்ணாடி நகரம்" தொகுப்பின் வழியே  தற்காலச் சூழலை மையப்படுத்தி சிறந்த சூழலியல் எச்சரிக்கையை உறுதிப்படுத்தி உள்ளார்.

    இந்தத் தொகுப்பு நான்கு கருத்துரைகள் உடைய தொகுப்பாக உள்ளது. இதுவொரு புதுமைதான்...கவிஞர் யவனிகா ஸ்ரீராம், கவிஞர் தேவேந்திர பூபதி, கவிஞர் அமிர்தம் சூர்யா, கவிஞர் சக்தி ஜோதி ஆகியோர் தொகுப்பில் உள்ள வேறு வேறு கவிதைகளுக்கு உரை எழுதியுள்ளனர். 

   முதல் கவிதை துவங்கி இறுதிக் கவிதை வரை முழுக்க சூழலியல் மாற்றங்களைப் பற்றி துயரத்துடன் பேசுகிறது.

இந்தக் கவிதைகளை முழுவதுமாக வாசித்த பின் மனம் உணர்ந்த கருத்துகளை இவ்வாறு வகைப்படுத்தலாம்.

* மேற்கிந்தியம் எவ்வாறு  நமது பொதுச் சூழலைச சீர்குலைக்கிறது என்கிற அவலம்.

" புதிய பொருளாதார கொள்கை, உணவு உற்பத்தியில் ஏற்படுத்திய பசுமைப் புரட்சி போன்ற புரட்சிகளால் நேர்ந்த சூழலியல் சிக்கல்கள்

* இனி நேரப் போகும் துயரங்கள் குறித்தான எச்சரிக்கை

*செயற்கை உரங்கள், புதிய வேளாண்மை உத்திகளென அறிமுகமான விதைகளால் தொலைந்த ,பாரம்பரிய விதைகள் குறித்தான வருத்தம்

*  பொருள் தேடிப் புறப்பட்டவர்களால் ,உருவான புதிய நாகரிக வளர்ச்சியும் ,அதனால் புறக்கணிக்கப்பட்ட அசலான கிராமங்களின் நலம்

   இப்படிப் பட்டியலிடலாம். மேலும் இத்தொகுப்பிற்குள் கீழ்க்கண்ட உணர்வுகளை உள்ளம் அறிந்து கொள்ளும்.

* வற்றிக் கொண்டிருக்கும் நீர் நிலைகளான ஓடை, அருவி, கிணறு போன்றவற்றின் உயிர் பிரியும் அவலக் கேவலொலி

*  காலங்காலமாக உயிர்ப்போடு இருந்த  மண்ணின் மீது பாய்ச்சப்படும் அமிலத்தால், அலறும்  மண்ணுயிரிகளின் அழுகைச சப்தம்

*  மரங்களை இழந்த பறவைகளின்  தேம்பியழும் அழுகையின் குரல்

* மூச்சுக் காற்றை முறையாகத் தர காத்திருந்தும் , தன்னை மாசுபடுத்துகிறார்களே என்ற காற்றின் பேரோலம்

" இதுவரை இளைய தலைமுறையினர் தங்களைப் பற்றிய எந்தவித உணர்தலுமற்று  ,தன் போக்கில் போகிறார்களே என்று ஆதங்கப்படும் கனகாம்பரம் உட்பட வேலியோரப் பூக்கள் வரையிலான அனைத்துப் பூக்களின் ஆதங்கம்

* சாயம்போன பட்டாம்பூச்சிகளின்  குரலில் படிந்திருக்கிற துயரம்.

  * என்னை இனியேனும் பயன்படுத்தலாமே என வேண்டுதலை முன் வைக்கிற தானியங்களின் வேண்டுகோள்

   இப்படி விரிவான தளத்தில் பயணிக்கும் இத்தொகுப்பில் இதற்கான தீர்வுகளும் உண்டு.பிரச்சனைகளை மட்டும் பேசாமல் அதற்கான தீர்வுகளையும் கூறுவதே சிறந்த இலக்கியமாகும். இந்தத் தொகுப்பின் கவிதைகள் தீர்வையும் முன் வைக்கின்றன.இது தொகுப்பிற்கு மேலும் கூடுதல் சிறப்பாகின்றது.

என்னைக் கவர்ந்த சில வைர வரிகள்
**.

  மழையில் நனைந்து பார்த்த
என் போல் இருக்க முடியாது என் பேரன்
மழையை முகர்ந்து பார்க்கலாம் அவன் பேரன்" 
**
பச்சை சோளம் பார்த்த கண்
கணினித்திரை விழுங்கி பாழ்குழியானது மனசு
பிம்பங்களே  உணவாகி செரிமானம் இன்றி
செத்துக் கொண்டிருக்கும் என் பொழுது
குயில்களைத் தொலைத்த என் காதில் சிணுங்கும்
கடிதங்களைத் தின்றுவிட்ட காளான்களால் " செல்"
**

அடுத்த தலைமுறைக்கான குழந்தை
முலை தடவிக்கொண்டிருந்தது
அங்கேயும்  குமட்டியது பொட்டாசியம் வாசனை"
**
.
ஓலைத் தடுக்குள்ளிருந்து வரும் செண்பகத்தின்
உடல் கரைத்த மஞ்சளை உறுஞ்சிக் குடித்த சின்ராசு
ஷவரில் ஜீவிக்கிறான்
" தினார்" களில் குளிக்கும் மென்பொருள்
மஞ்சுளாவின் கணவனாய்.

**
கைபேசியை மறந்துவிட்ட நாளில்
என் இதயத்தை கழற்றி
மரத்தில் தொங்கவிட்டது போலாகிறது
பேச்சாளர் ஊரில் நான் மட்டும் ஊமை.
**

    கவிதை வரிகளொடு அவற்றிற்கான தலைப்புகளிலும் சூழலியலுக்கான முன் எச்சரிக்கையையும், அழகியலையும் ஓருங்கே அமைத்த விதமாக சிறப்பாகிறது. இப்படியான காலத்திற்குத் தேவையான  தொகுப்புகளை வெளியிடும்  அன்னை ராஜேஸ்வரி பதிப்பகத்திற்கு வாழ்த்துகள்
**
க.அம்சப்ரியா
**

Popular posts from this blog

கவிதைப் பயணம்

அழகின் ஊர்வலம்

க.அம்சப்ரியா விபரங்கள்