அழகின் ஊர்வலம்

அழகின் ஊர்வலம் -17

வியப்பில் மலர்ந்த காதல் அழகு
***

க.அம்சப்ரியா
**
 உலகின் காட்சிகள் யாவும் அற்புதமும், துயரங்கள் நிறைந்த இடங்களாகவும்தான் காட்சியளிக்கின்றன. எல்லாரும் கண்களால் பார்த்து கடந்துவிடுகின்றனர். அவர்களுக்குத் தாங்கள் பார்த்த காட்சிகள் எதுவும் மனதிலே பதிவதில்லை.  உற்று நோக்குவது திட்டமிட்ட செயல். அதில் வியப்பான காட்சிகள் அகப்படும் சாத்தியக் கூறுகள் குறைவுதான். பார்த்த காட்சி மனதிற்குள் பதிய வேண்டுமானால் அது முன் எப்போதும் இல்லாத உணர்வொன்றை உருவாக்க வேண்டும். அந்தக் காட்சியிலிருந்து மனம் வேறு எங்கும் நகரவிடாமல் ஊசியாகத் துளைக்க வேண்டும். பாதங்கள் எங்கு பயணித்தாலும், மனமோ பார்த்த காட்சியிலேயே நிலைக்க வேண்டும். 

   அதற்கு ஒரே தகுதிதான். பார்க்கின்ற காட்சிகளை வியந்து பார்க்கும் கூரழகுப் பார்வை வேண்டும். 

   இதோ ஒரு காதலர் ஒரு பெண்ணைப் பார்த்து வியந்து அழகின் பாதையில் பயணிக்கிறார். 

தான் பார்த்த பெண் தெய்வ மங்கையோ? அழகிய மயிலோ? அல்லது மானிடப் பெண்ணோ? எதுவென்று தெரியாமல்  என் நெஞ்சம் மயங்குகின்றதே!

  இது மட்டுமா?

இந்தக் கண்கள் என் உயிரை வருத்துகின்றது. 

 இவள் எமனோ? மனிதக் கண்களோ? மானின் விழிகளோ? இந்த மூன்றும் இணைந்தனவோ? 

  இந்த வியப்புகள் கடந்து இன்னொன்றையும் கூறுகிறார்.

 எமனை நான் இதுவரை பார்த்ததில்லை. இன்று கண்டேன்..அது பெண் தன்மையோடு போரிடும் கண்களைக் கொண்டதுதான். 

   இப்படிக் கண்களை வியந்தும்,பார்வையில் தன்னை இழந்த கவிஞனின் வரிகளில் நம் உலகைக் காண்போம்!

இனி வரிகள்

அணங்குகொல்? ஆய்மயில் கொல்லோ! கனங்குழை
மாதர்கொல்? மாலும்என் நெஞ்சு

*
கூற்றமோ! கண்ணோ! பிணையோ! மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து.

*
பண்டறியேன் கூற்றென் பதனை இனி அறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

                   திருக்குறள்.- திருவள்ளுவர்.

   காதல் கண்களில் தொடங்குவது, வியப்பில் தொலைவதுதான்.

  வியந்து வியந்து இருவிழிகள் காணும் காட்சிகள் வாழ்வின் வரமாக அமையும்!

    வியந்து பார்க்க வேண்டுமெனில் மனதிற்குள் இருக்கிற இயந்திரத்திற்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

வியந்து பார்த்தால் வாழ்வே ஒரு பேரழகுதான்!

**

Popular posts from this blog

கவிதைப் பயணம்

க.அம்சப்ரியா விபரங்கள்