கவிதைப் பயணம்

அறையை நிறைக்கும் மாயக் கவிதை
***

பொள்ளாச்சி வாருங்கள்....தொகுப்பைக் கொண்டாடுவோம்

***
  ஒர்  அறையை  வெடித்துக் கிளம்பும் சிரிப்பொலியால்  நிறைத்து  வாழ்வொரு  பூ வனமெனக் கொண்டாடியவர்களின்  அன்பினில்  ஏதோ  ஒரு காலத்தில் கரைந்திருக்கிறேன். எப்போதும் புலம்பல்களால்  தனக்குத் தானே  ஒரு பாடலைப் பாடி வெற்றிடங்களை நிரப்பிக் கொள்கிறவர்களோடும்  இருந்திருக்கிறேன்.

       தனித்துச் சமைத்து, தனித்துச் சுவைத்து, தனித்துறங்கி, தனித்தலையும் மனதையும் அறிவேன்.இந்த அறைகளையெல்லாம் கடந்து ஓர் அறையைக் காண வேண்டுமெனில் ....?

     ஓர்  அறையின் வாசனைதான் என்ன? ஓர் அறைக்கு கதவுகள் உண்டென்பது போலித்தனமா? அந்த  அறையை எது நிறைத்தபடி  இருக்கிறது? அறையை  தூசும் துரும்பும் அண்டாமல் இடைவிடாமல் ஏன் சுத்தம் செய்து கொண்டே  இருக்கிறார்கள்? வினாக்களால் சூழப்பட்டதுதான் அறை. விடைகள் அற்ற ,விடைகள் அவசியமற்ற அறைகளின் தன்மையை கவிமனம் அறியும்.

      கவிஞனை இளங்கவிஞர், வளர்ந்த கவிஞர் என்றெல்லாம் கூறுவது எதன் அடிப்படையில்? படைப்பின் முதிர்ச்சியே யாவற்றையும் தீர்மானிக்கிறது. காணும் காட்சியைத் தன் உணர்வால் நிறைத்து, வாசிக்கிறவரை  இடைவிடாமல்  யோசிக்கச் செய்கிற ஒரே ஒரு கவிதையை வாசித்தால் அன்றைக்கு நாம்  கொடுத்து வைத்தவர்கள்.

    ஒன்பதாம் வகுப்பு மாணவி என்பது ஓர் அடையாளத்திற்குத்தானே தவிர கவிதைகளில் தேர்ந்த ஞானமும்,காணாதன காட்டும்  அபூர்வமும் வாய்த்தவராக நமக்கு அறிமுகமாகிறார் கவிஞர் பூ.தனிக்‌ஷா பாரதி.

     அறையை இவர் காணும் அழகில் கவித்துவம் தனித்து நம்மை அணைத்துக் கொள்கிறது.

    தன் அறையை நிரப்பியிருக்கும்  புதையலை நமக்குச் சுட்டிக்காட்டும் அழகில் நாமும் நம் அறையை இசையால் நிரப்பத் துவங்குகிறோம். அது எப்படியான இசை? கற்பனையின்  உச்சத்தில் நம்மோடு உறவாடுகிற இசை. இசைப்பவனைக் கண்டெடுக்கும் லாவகம்தான் கவிதையின் உச்சமும்.

      இனி இந்த ஹைக்கூ கவிதையை உங்கள் வண்ணம் தீட்டப்பட்ட சுவரில் இணைத்தால் நீங்களும் புதிய உலகைக் காணலாம்

   "சுவரில் மாட்டப்பட்டிருக்கும்
நீலவண்ணனின் புல்லாங்குழல் இசையால்
நிறையும் அறை."

  - நீலவண்ணனைக் கண்டறிந்தால் இரவும் இசைவனமாகும்.

விரைவில் பொள்ளாச்சி இலக்கியவட்டம் வெளியிடும் ஒன்பதாம் வகுப்பு மாணவி பூ. தனிக்‌ஷா பாரதியின் புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள்  ஹைக்கூ நூலில் ஒரு கவிதை.

    15-05-2022 பொள்ளாச்சியில் கொண்டாடுவோம் வாருங்கள்...

**
க.அம்சப்ரியா

நன்றியும் அன்பும் கவிஞர் க.அம்சப்ரியா Punnagai Amsapriya

Popular posts from this blog

அழகின் ஊர்வலம்

க.அம்சப்ரியா விபரங்கள்