மே மாத கொலுசு மின்னிதழில் வெளியான கட்டுரை-
******************"
நன்றி ; மு.அறவொளி அவர்கள்
******
காதலால் கசியும் கவிதையுலகம்...
****
க.அம்சப்ரியா
****
காதலினால் உயிர் தோன்றும் - இங்கு
காதலினால் உயிர் வீரத்திலேறும்
காதலினால் அறிவெய்தும் -இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்
- பாரதியார்
உலகச் சொற்களுக்கெல்லாம் மகுடம் சூட்டும் ஒரு சொல் ஏதென்று வினாவினால் "காதல் " என்பதன்றி வேறென்ன....? காதலற்ற சொற்களில் உயிர்ப்பில்லை....காதலற்ற வாழ்வில் கசப்பே எஞ்சி நிற்கும் ...காதலென்பதற்கு ஆயிரமாயிரம் விளக்கங்கள் இருக்கலாம் ...காதல் இல்லை என்று சொல்வதற்கு ஒரு சொல்லும் இல்லை...அவ்வளவு விளக்கங்களும் காதலுக்கு மேலும் உரமூட்டக் கூடியவைகள்தானே....
காவியங்களின் உயிர்த்தன்மையே காதலில்தான் ஒளிந்திருக்கிறது...காதலனுக்கு காதலியின் பார்வையும் ,சொற்களும் வாழ்வின் வரங்கள்...காதல் வசப்பட்ட பின் பேசிக்கொள்ளக் கூடிய சொற்கள் பெரும்பாலும் உளறல்கள்தான்... வானத்தை வில்லாக வளைக்க இயலாது...காதல் வளைப்பதாகச் சொல்லும்...வெறுமனே வளர்ந்து தேய்ந்து ,தேய்ந்து வளர்கிற நிலா காதல் காலத்திற்கு முன்பும் ,பின்பும் வேறு பரிமாணத்தைக் கொண்டு தனித்துவம் பெற்றுக் கொள்கிறது...
காதலியைக் கண்டு கொள்கிற அந்த நிமிடமும் ,காண்கின்ற ஒவ்வொரு நிமிடமும் இன்பப் பதற்றம் நிறைந்தவை...உள்ளுக்குள் ஓடுடைத்து வெளியேறும் குஞ்சுப்பறவையின் படபடப்பாய் ...! காலமோ உருகி வழியும் பனிக்கூழாகும்...வேர்வரை ஊடுருவிப் பரவும் வாழ்வுச் சுவையாகும்...
உலகப்பொது மறை திருவள்ளுவமான திருக்குறள் காதலைக் கொண்டாடும் அழகை ஒரு முறையேனும் சுவைத்துப் பார்ப்பது காதல் சுவை...
வள்ளுவர் தன் மனப்பதற்றத்தை இப்படிக் கொண்டாடுகிறார்.
அணங்குகொல்? ஆய்மயில் கொல்லோ? கனங்குழை
மாதர் கொல்? மாலும் என் நெஞ்சு
என்று வியந்தோதுகிறார்..காதிலே குழை அணிந்த இக்காரிகை ,ஒரு தெய்வ மங்கையோ ? அழகிய மயிலோ! அல்லது மானிடப் பெண்ணோ? எதுவென்று அறியாமல் என் நெஞ்சம் மயங்குகின்றதே..!
இது வள்ளுவர்க்கு மட்டுமே மயக்கமா...? இன்றைக்கு எந்த வயதில் காதல் கொள்கிறவர்க்கும் பொருந்துமே....!
அதனால்தானே ..பார்வைஒரு போதையென எப்போதுமே மனது கிடந்து தவிக்க
அதனால்தானே ,..ஒரு நிமிடம்..ஒரு பார்வையைத் தரிசித்தால் போதுமென மனம் அல்லாடுகிறது...ஆயிரம் பேர் கூடிக்கிடக்க ,பிரியமானவர்களின் உருவம் மட்டுமே மனதால் மையம் கொள்கிறது... ! காதல் காவியமாகும் போதே காவியமும் காதலாகிவிடுவதும் அன்பின் உச்ச நிலையன்றி வேறென்ன...?
காதலின் துவக்கமே ,பார்வையில்தானே துவங்குகிறது...முதல் பார்வையிலேயே ஏதோ ஒரு மயக்க நிலை கிறுகிறுத்து ,மனம் தடுமாறித் தவிக்கிறதே...! மறுபடியும் மறுபடியும இந்தப் பார்வை வாய்க்காதா என்று மனம் மறுகுகிறதே...!
மறுபடியும் வள்ளுவர்தான் காதல் பார்வையைக் கொண்டாடுகிறார்...ஒரு பார்வை நோயாகிறது...மறுபார்வை அந்த நோய்க்கு மருந்தாகிறது...காதல் பார்வையின் சிறப்பே அதுதானே....
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒரு நோக்கு
நோய் நோக்கொன்றன் நோய் மருந்து..
என்கிறார்...வள்ளுவர் காதலியின் பார்வையில் சிக்கி படாதபாடு பட்டிருப்பார் போலிருக்கிறது...
வள்ளுவரின் பார்வையில் நோயும் ,நோய்க்கான மருந்தாகவும் பார்வை காதல் உச்சமாகிறது...
காதலில் பார்வையே ஒரு கலையென்றால் ,சிரிப்பொரு புனைவோவியம்.....யாரும் பார்த்துவிடக் கூடாது...ஆனால் உரியவர்க்குப் புரிந்துவிட வேண்டும்...அது மாயக்கலை...மயக்குங்கலை.....
சிரிப்பைச் சில வகைப்படுத்தலாம்...தனக்குத்தானே சிரித்துக் கொள்வது...தனக்குரியவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளும் ரகசியச் சிரிப்பு...யாரும் கண்டாலும் எதற்கானதென்று புரிந்து கொள்ள இயலாச் சிரிப்பு...சற்றே பிசகினாலும் உறவை அறுத்துவிடும் சிரிப்பும் இருக்கும்...காதலென்றாலே அசட்டுத்தனமென ஒரு சிரிப்பு...
வள்ளுவர் காட்டும் காதலர் சிரிப்பு என்னவென்று மென் புன்னகையால் காண்போம்...
யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்கங்கால்
நான்நோக்கி மெல்ல நகும்
அவளை நான் பார்த்தால் ,அவள் நிலத்தைப் பார்க்கின்றாள்...அதை உணர்ந்து ,அவளை நான் பார்க்காத போது ,அவள் என்னைப் பார்க்கின்றாள்...எல்லாவற்றையும் கடந்து ஒரு புன்சிரிப்பொன்றை புரிகின்றாளே....
இப்போதும் யாரோ ஒருவரின் விழியில் யாரோ ஒருவரின் குறுஞ்சிரிப்பொன்றை பார்த்தபடியேதான் காதல் பயணிக்கிறது....தெரு முனையில், பணி இடத்தில் ,பயணித்தலின் நெரிசலில் வள்ளுவரின் வாரிசுகளை பார்வைச் சிரிப்புகளால் காண்கிறோம்...
புன்னகையால் என்னன்னவோ செய்தவள்தான்...என்னவெல்லாம் என்ற வினாவிற்கு ஒன்றும் சொல்லத் தோன்றாமல் என்னதான் சொல்லி சமாளிக்கிறார் வள்ளுவர்...?
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினன் பைய நகும்
அவள் மெல்லியலாள்...அசையும் அவளின் சிரிப்பிலே என்ன அழகு..! என்ன அழகு..!
ஆயிரத்து முந்நூற்று முப்பது குறளுக்குச் சொந்தக்காரர்...ஒரு குறளுக்கு ஏழு சொற்கள் என்றால் பெருக்கிப் பார்த்து அத்தனை சொற்களை உடையவர் ஒரே சொல்தான் சொல்கிறார்...என்ன அழகு...! என்ன அழகு...என்று சிரிப்புக்கு முற்றுப்புள்ளியைத் தொடராக்குகிறார்...
காதல் என்றால் பார்வை...பார்வைக்குப் பின் ரகசிய சிரிப்பு...பிறகென்ன பேசத்துடிப்பதுதானே....
அதற்கும் வள்ளுவர் வந்துவிடுகிறார்...
கோபத்தை வெளிப்படுத்துவது போலொரு பாசாங்கு...பார்வையில் ஒரு நெருப்பு....பார்ப்பவர்களுக்கோ இருவரும் நெடுநாள் பகை போல போக்குக் காட்டும்...
செறாச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர் போன்று உற்றார் குறிப்பு
என்று தனது கவிதைக்குறளால் காதலர் பேச்சை அடையாளப்படுத்துகிறார்...
காதலர் பேச்சை அதிகம் ஆக்ரமிப்பது மௌனம்தானே....பிறகு பேசிப் பேசி அது இனிப்பாகுமா..? கசப்பாகுமா...என்பது காதலர்க்கே வெளிச்சம்...
காதலை காதலாகவே கொண்டாடும் பேரின்பம் எல்லார்க்கும் வாய்ப்பதில்லை...காதல் கனிந்து இல்லறமாகும் கொண்டாட்டமும் ,அதுவே ஆயுள்வரை நீடிக்கும் பேரின்பமும் வாழ்வின் கொடையாகும்
இன்னும் நான் கூறாத பலவற்றை வள்ளுவர் இனிக்க இனிக்க காதல் விருந்தை எல்லாச்சுவையிலும் படைத்துள்ளதை சுவைக்க வேண்டுமா...,? ஒரு முறை வள்ளுவருக்குள் பயணம் செய்யுங்கள்...
அடுத்த மாதம் சங்க இலக்கிய காதலில் பயணிப்போம்.....!
****