நூல்களைக் கொண்டாடுவோம்

நூல்களைக் கொண்டாடுவோம் - 06
****

நூல் ; நான்தான் உலகத்தை வரைந்தேன்

வகை ; சிறார் கவிதை

ஆசிரியர் : மகிழ் ஆதன்

வெளியீடு ; வானம் பதிப்பகம்
**
  மகிழ்ச்சியைப் பரிசளிக்கும் கவிதைகள்
***
     எல்லோர்க்குள்ளும் கவித்துவம் நிரம்பி வழிந்தபடி இருக்கிறது.  அது இலக்கியத்தின் வேராக இருக்கிறதென்பதை அறியாமல்  பலரின் கவித்துவம்  யாராலும் ,கவனிக்கப்படாமலும் ,ஊக்கப்படுத்தப்படாமலும்  காற்றில் கலந்துவிடுகிறது. கற்பனை உலகம் பெரு மகிழ்ச்சியானது. நம் விருப்பம் போல மகிழலாம். துயரமாகலாம். விரைவில் ஒன்றிலிருந்து இன்னொன்றாக விடுபடலாம். குறிப்பாக வயதானவர்களிடமும் குழந்தைகளிடமும் இருக்கின்ற இந்த  அளப்பரிய  பேராற்றல்  அலட்சியப்படுத்துவதாக, நிராகரிக்கப் படுவதாக ,கவனிக்கப்படாததாக  யாருக்கும் பயனற்றுப் போகிறது. 

     யாரேனும் ஒருவரால் முளைத்த செடியொன்று எல்லோர்க்குமானது என்று கண்டறிவதும், முதிர்மரத்தின் பலனை உணர்ந்து  ,கொண்டாடப்படுவதும் அபூர்வமாகவே நிறைவேறுகிறது.

     பொய்யிற்கும் ,கற்பனைக்கும் இடையே எந்தவிதமான வேறுபாடு இருக்கிறதென்பதே அறிதலின் முதல் கலையாகிறது. அறிதலை உணர்ந்த பெற்றோர்களே தங்கள் குழந்தைகளின் அளப்பரிய ஆற்றலை உணர்கிறார்கள். அதை ஊக்கப்படுத்துகிறார்கள். வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்திக் கொண்டாடுகிறார்கள்.

    படைப்பின் ஊற்று குழந்தைகளிடமே பொங்கி வழிகிறது. பெரியவர்களுக்கு எதுவும் புரியாததாலேயே  ,குழந்தைகளின் சொற்களில்  மிளிரும் அழகு புறக்கணிக்கப்படுகிறது. வன்முறைகளிலேயே  கொடும் வன்முறை குழந்தைகளின் திறமையை அவர்களின் கல்வித் திறனோடு ஒப்பிட்டு ,சுயத்தை அழித்தெடுப்பதே! பல ஆண்டுகளாக  குழந்தைகளோடு புழங்கி வருவதில் கண டறிந்த உண்மையாக இதை உரத்தே கூறுவேன். குழந்தைகளின் எளிய செயல்கள் கூட பெரியவர்களின் புத்திசாலித்தனமாக பார்க்கப்படும் அவலம். குழந்தைகளின் திறனை உற்று நோக்கி அதை உணர்வதே பெருங்கலையும் கொடையும்தான் .அப்படிக் கண்டறியப்பட்ட இளங்கவிஞர் 

    பெற்றோரால் கவிஞராக கண்டெடுக்கப்பட்ட ஒன்பது வயதுச் சிறுவன்  மகிழ் ஆதன் தனது முதல் கவிதைத் தொகுப்போடு நம்மோடு இணைகிறார். 

    "நான்தான் உலகத்தை வரைந்தேன் "
 
    ் இந்தத் தலைப்பே தத்துவத்தால் முதிர்ந்த ஞானச் சொல்தான். நான்தான் உலகத்தை வரைந்தேன் என்றாலே அது நமக்கே மகிழ்ச்சியானதாகவே அமையும். இது எதிர்பார்ப்பு மட்டுமல்ல..எதிர்காலத்திற்கான திட்டமிடுதலும்தான். குழந்தைகளின் உலகம் மகிழ்ச்சியானதுதான்.

    கவிதைக்கான பாடுபொருள்  ஆழமானதாகவும் ,மனதின் வெளிப்பாடாகவும் ,மெய்யானதாகவும் அமைந்திருக்கிறது. சிறுவன் என்பதை சற்று நேரம் மறந்துவிட்டு இந்தக் கவிதைகளுக்குள் பயணிக்க வேண்டும். 

  அங்க யாரோ இருக்காங்க
அது யாரும் இல்ல
அது நம்மதான்

    இது ஒரு மூன்று வரி கவிதை.இக்கவிதைக்குள் ஒளிந்திருக்கிற நுட்பமும் ,ஞானச்சுடரும் எளிமையானதல்ல. பொய்பிம்பங்களை நொறுக்கும்  கவிதையாக இதை பார்க்கலாம். அது நம்மதான் என்பதற்கு பதிலாக நான்தான் என்று கூறியிருந்தால் கவிதை தனியொருவரின் அனுபவமாக மாறியிருக்கும்.ஆனால் நம்மதான் என்ற தனித்தவொரு சொல் வழியே இந்த உலகம் என்பது எல்லோருக்குமானது என்கிற பரந்த மனமாக கவிஞனின் உள்ளம் வெளிப்படுகிறது.

   இன்னொரு அந்தாதி கவிதை

  பறவை நம்ம உயிரு
 உயிரு  நம்ம மனசு
மனசு நம்ம ஊரு

மறுபடியும் மறுபடியும் யோசிக்கத் தூண்டுகிற  வரிகள். மனிதம் என்றால் என்ன ? சூழலியல் என்பது எதைச் சார்ந்து இயங்குகிறது?  என்பதையும் ,உயிர் எதற்குச் சமமானது என்பதையும் ,தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது.

   அதீத கற்பனையே குழந்தைகளுக்கான கவிதையாகவும் ,குழந்தைக் கவிதையும்  பலமாக இருக்கிறது. அதனால்தான் சக்தி மானும்,ஸ்பைடர் மேனும்  ,டோராக்களுமென குழந்தைகள் உலகம் விரிகிறது. சாத்தியமற்ற  கற்பனையே எதிர்காலத்திற்கான புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமாகிறது. இதோ இந்தக்  கவிதையில்  போர்வை என்ன செய்யும் என்று கற்பனை செய்கிறது.  நான் குழந்தை பருவத்தில் படித்த பறக்கும் கம்பளம் , மாயாவி கதைகளை நினைவூட்டுகிற கவிதையாகவும் அமைந்திருக்கிறது

  போர்வை நம்மளைப்
  போர்த்தி இருக்கும்
 போர்வை நம்மளைப்
பறவை ஆக்கும்

போர்வை நம்மளைப்
போர்த்தி இருக்கும்
போர்வை நம்மளைப்
பார்வை  ஆக்கும்

    யாரை, எதற்காக மீறுகிறோம் என்றே தெரியாமல், யாரிடமிருந்து விடுதலையாவது என்றறியாமல், பெற்றோர்களை, ஆசிரியர்களை, நல்ல கருத்துகளை மீறுவதே விட்டுவிடுதலையான வாழ்வு என்று நினைக்கிறவர்களுக்கு உரத்த அறிவுரைக் குரலாக இல்லாமல் மௌனமாகப் பேசுகிற  ஒரு எளிய ஆனால் காலத்திற்குமான அறிவுரைக் கவிதையாக என்னைக் கவர்ந்த இன்னுமொரு கவிதை

என் கால்தடங்களை
என் கால்தடங்களை
என்னைப் பெத்த
அம்மாவாகப் பார்க்கிறேன்

    இரண்டு தளங்களில் இந்தக் கவிதையை விரிக்க முடியும். ஒன்று கால்தடங்களில் பார்ப்பது, இன்னொன்று அம்மாவின் கால்தடங்களில் பயணிப்பது. வாசிப்பவர்களுக்கு இன்னும் கூட வேறு தளத்தில் விரிவாகலாம்.

   இந்தக் கவிதைகளை முழுமையாக வாசித்து முடிக்கையில்  கீழ்க் கண்ட வகையில் கவித்துவத்தை வகைப்படுத்தலாம்.

* அதீத கற்பனையில் முகிழ்க்கும் கவிதைகளில் பொங்கும் மகிழ்ச்சி

* வியக்க வைக்கிற காட்சிப்படுத்துதல்கள்

" புதிய சொற்களில் பொங்கிப் பெருகும் ஆனந்த நிலை

" பல தத்துவார்த்தமான உண்மைகளை ,தன்னை அறியாமலே வெளிப்படுத்தியிருக்கிற மன நேர்மை

* மீண்டும் ,மீண்டும் வாசிக்கத் தூண்டும் அழகியல் தூண்டல்.

   இன்னும் சில கவிதைகள்

கோலம் போடும் கோலம்
கோலம் வரையும்
கோலம் நிறையும்
**
கடல் ஒரு மேகம்
மேகம் ஒரு பகல்
நான் ஒரு மனசு
என்னைத் தொட்டால் ஒரு ரோஜாப்பூ
**
மரம் நிழல்
அந்த ஒளி
என் மேலே பட்டு
கண்முத்தம் தரும்
***
தொகுப்பு குறித்து கூடுதலாக கூற நினைக்கும் கருத்துகள்
***
வடிவமைப்பு
**
ஆகச் சிறந்த வடிவமைப்பு. நாட்குறிப்பேட்டைப் போலவே வடிவமைக்கப்பட்டு ,நாள் வாரியாக ,கவிதை படைக்கப்பட்ட தேதியோடு அமைந்துள்ள விதம் அடடா...என வியக்க வைக்கிறது.

* அழகிய அட்டைப் படம்

* நூலின் நீள அகல அமைப்பு 

    இவையெல்லாம் தொகுப்பிற்கு கூடுதல் அழகு
**
பெற்றோர்க்கு
**
 இப்படியொரு கவிஞனைக் கண்டறிந்த பெற்றோருக்குக் கூடுதல் வாழ்த்துகள்

**
நூலிற்கான முன்னோட்ட உரைகள்
**
ஆசை அவர்கள் இந்த தொகுப்பு உருவான விதம் குறித்து கூறியுள்ள கருத்துகளும்,பா.வெங்கடேசன் அவர்களின் பின் அட்டை உரையும் கவிதைகளைப் படித்து முடித்த பின் வாசிக்கும் போது மீண்டுமொரு முறை தொகுப்பை வாசிக்கத் தூண்டும்

    மகிழ் ஆதன் அவர்களுக்கு கொண்டாட்டமான வாழ்த்துகள்
***
க.அம்சப்ரியா

Popular posts from this blog

கவிதைப் பயணம்

அழகின் ஊர்வலம்

க.அம்சப்ரியா விபரங்கள்